செயல்பாடுகள்

முகப்பு / செயல்பாடுகள்

பிரச்சாரங்கள்

எங்கள் அமைப்பு, தனியாகவும், ஒத்த எண்ணம் கொண்ட பிற அமைப்புகள் மற்றும் குழுக்களுடனும் இணைந்து, உள்ளூர் நிர்வாகத்தை மையமாகக் கொண்ட குறிப்பாகக் கிராம சபை மற்றும் பகுதி சபை போன்ற பங்கேற்பு ஜனநாயக தளங்களை வலுப்படுத்தும் வகையில் பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளோம். நாங்கள் சமீபத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை, 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை உடனே நடத்த வலியுறுத்தவும், ஊராட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அம்பலப்படுத்தி அவர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும் தமிழ்நாடு முழுவதும் 42 நாட்கள் தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வந்துள்ளோம். தவிர, எங்கள் முக்கியமான பிரச்சாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

 

  • 2025 – ஜனவரி 26 முதல் மார்ச் 8 வரை – ஊராட்சி உரிமை மீட்பு பயணம் - 2025

    28 மாவட்டங்களுக்கு ஊராட்சித் தேர்தல்களை உடனே நடத்துமாறு அரசை வலியுறுத்துவதற்காக 28 மாவட்டங்களை நோக்கிய மாநில வாரியான பிரச்சாரம்

  • 2024 - நகரமயமாக்கல்

    கட்டாய நகரமயமாக்கலுக்கு எதிரான அஞ்சலட்டைப் பிரச்சாரம்

  • 2023 – நவம்பர் - ஊராட்சி உரிமை மீட்பு பயணம் - 2023

    தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994 இல் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தம் (104 & 106) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மாநில வாரியான பிரச்சாரம்

  • 2023 – ஏப்ரல் – MGNREGA விழிப்புணர்வு

    MGNREGA மற்றும் அதன் தொழிலாளர் வரவு செலவு அறிக்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 3 மாவட்டங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு பிரச்சாரம்

  • 2021 – செப்டம்பர் – கிராமசபை மீட்புப் பயணம்

    கிராம சபை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கிராம சபையை கட்டுப்பாடுகள் இல்லாமல் நடத்துமாறு அரசைக் கோரவும் மாநில வாரியான பிரச்சாரம்

  • 2021 – ஆகஸ்ட் - உள்ளாட்சி அரசுகள் குறித்த விழிப்புணர்வு

    உள்ளாட்சி அரசுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘காந்தியம் முன்னெடுபோம் கூட்டியக்கம்’ நடத்திய பிரச்சாரத்தில் பங்கேற்றோம்

  • 2020 – டாஸ்மாக் பற்றிய பிரச்சாரம்

    டாஸ்மாக் கடைகளைத் திறக்கும்/ மூடும் அதிகாரத்தை கிராம சபைக்கு வழங்கக் கோரி அரசை வலியுறுத்திய அஞ்சல் அட்டைப் பிரச்சாரம் மற்றும் கிராமசபை தீர்மானப் பிரச்சாரம்

  • 2017 – டிசம்பர் - கிராம சபை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு

    கிராமசபை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணூரில் இருந்து கரூரில் உள்ள டாக்டர் நம்மாழ்வாரின் வானகம் வரையிலான மாநில வாரியான பிரச்சாரத்தில் பங்கேற்றோம்

  • 2017 – ஜூலை - கிராமசபை பற்றிய விழிப்புணர்வு

    கிராம சபையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சுமார் 73 கிராமங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்தோம்

 

பயிற்சிப்பட்டறைகள்

கிராம சபையில் பங்கேற்கும் சமூக உணர்வுள்ள குடிமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளூர் நிர்வாக அமைப்பு பற்றி மேலும் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே உள்ளூர் நிர்வாக அமைப்பு குறித்த பயிற்சிப்பட்டறையை, பல்வேறு குழுக்கள் மற்றும் அமைப்புகளுக்கு நாங்கள் வழங்குகிறோம். பட்டறையின் போது கீழ்கண்டவற்றை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்

  • இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் சுருக்கமான வரலாறு (கிராமப்புற மற்றும் நகர்ப்புற)
  • தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி ஊழியர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள்
  • கிராம ஊராட்சி முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வரையிலான நிர்வாக அமைப்பு
  • கிராம ஊராட்சிகளின் வருவாய் வளங்கள் மற்றும் நிதி மேலாண்மை
  • நிலைக் குழுக்கள்
  • 100 நாள் வேலை சட்டம்
  • கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்
  • தகவல் பெறும் உரிமை சட்டம்

இதுவரையிலான எங்கள் பயிற்சிப்பட்டறைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்...

 

  • 2024 - அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

    சிட்லிங்கி கிராம ஊராட்சியின் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான குழு செயல்பாட்டிற்கான பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது

  • 2023 - நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குழு உருவாக்கம் குறித்த பயிற்சிப்பட்டறை

    திருப்பெரும்புதூரில் உள்ள அரண் அறக்கட்டளைக்கு பகுதிசபை குறித்த பயிற்சிப்பட்டறையும், சிட்லிங்கி, பெரியகுமட்டி மற்றும் அரங்கூர் ஊராட்சி தன்னார்வலர்களுக்கான குழு செயல்பட்டிற்கான பயிற்சிப்பட்டறையையும் நடத்தப்பட்டது

  • 2022 - உள்ளாட்சி நிர்வாகம் குறித்த பயிற்சிப்பட்டறைகள்

    நாம் தமிழர் கட்சி, வானவில் அறக்கட்டளை மற்றும் கிறிஸ்தவ மிஷனரியின் வாழ்க்கை மையம் (திண்டுக்கல்) ஆகியவற்றிற்கு ஆளுமை குறித்த பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டது

  • 2021 - உள்ளாட்சி நிர்வாகம் குறித்த பயிற்சிப்பட்டறை

    பாண்டிச்சேரியில் சமூக நல்லிணக்க முன்னணிக்காக உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது

  • 2019 - உள்ளாட்சி நிர்வாகம், தலைமைத்துவம் மற்றும் கிராம வளர்ச்சித் திட்டம் குறித்த பயிற்சிப்பட்டறைகள்

    வானூர்SLI, சிட்லிங்கி (SOFA) மற்றும் ஏகம் அறக்கட்டளை போன்ற அமிப்புகளுக்கு உள்ளூர் நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் குறித்த பயிற்சிப்பட்டறைகளைகளும் கிராம இளைஞர் குழுவிற்கு VPDP பயிற்சிப்பட்டறையும் நடத்தப்பட்டது. மேலும் கந்தஞ்சாவடி தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்காக உள்ளூர் நிர்வாகம் குறித்த பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

  • 2018 - ஆளுகை குறித்த பயிற்சிப்பட்டறை

    சித்திலிங்கி ஊராட்சியின் SOFA மற்றும் கடவூர் ஊராட்சியின் சேவாப்பூர் கிராம மக்களுக்கு ஆளுகை குறித்த பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது

போராட்டங்கள்

ஜனநாயகத்தில் அநீதிகள் நிகழும்போது அதை எதிர்த்து குரல் கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த அடிப்படையில், பங்கேற்பு ஜனநாயகத்திற்கு எதிராக அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தின் மூலம் நமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஒரு அமைப்பாக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இது தொடர்பாக, நாங்கள் நடத்திய போராட்டங்களின் சுருக்கம் பின்வருமாறு.

 

  • 2025 - மார்ச் - ஊராட்சித் தேர்தலை நடத்தக் கோரி போராட்டம்

    28 மாவட்டங்களுக்கு ஊராட்சித் தேர்தலை நடத்துமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்

  • 2024 - கட்டாய நகரமயமாக்கலுக்கு எதிரான போராட்டம்

    உள்ளூரில் ஏற்பாடு செய்யப்பட்ட வலுக்ககட்டாய நகரமயமாக்கலுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றோம்

  • 2023 - அக்டோபர் - ஊராட்சி செயலாளரை பணிநீக்கம் செய்யக் கோரி போராட்டம்

    கிராமசபையில் ஒரு விவசாயியைத் தாக்கிய பிள்ளையார்குளம் ஊராட்சி செயலாளரை பணிநீக்கம் செய்யக் கோரி உள்ளூரில் ஏற்பாடு செய்யபட்ட போராட்டத்தில் கலந்து கொண்டோம்

  • 2023 - பிப்ரவரி - MGNREGS ஊதியத்தைத் தாமதமாக வழங்குவதற்கு எதிரான போராட்டம்

    ஈரோட்டில் MGNREGS ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்காக CPI இன் BKMU ஏற்பாடு செய்த போராட்டத்தில் பங்கேற்றோம்

  • 2022 – ஊராட்சி சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம்

    தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994 இல் 104 & 106 பிரிவுகளில் செய்யப்பட்ட திருத்தங்களைத் (அதாவது ஊராட்சி செயலாளரை தண்டிக்கும் மற்றும் இடமாற்றும் அதிகாரத்தை பஞ்சாயத்து தலைவரிடமிருந்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாற்றுதல்) திரும்பப் பெற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்

  • 2020 - அக்டோபர் - கிராமசபை மீட்பு வாரம்

    ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகும் கிராமசபை நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை திரும்பப் பெறாமல் இருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து 7 நாள் தொடர்ச்சியான செயல்பாட்டு அடிப்படையிலான போராட்டத்தை நடத்தினோம்

  • டாஸ்மாக் மதுக்கடைகள் தொடர்பான அதிகாரத்தை கிராம சபைக்கு வழங்கக் கோரி போராட்டம்

    டாஸ்மாக் மதுக்கடைகள் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கிராம சபைக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்

  • 2016 - ஊராட்சித் தேர்தலை நடத்தக்கோரி போராட்டம்

    அனைத்து மாவட்டங்களுக்கும் ஊராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்

 

த. நா. ஊ. பி. கூ.

தமிழ்நாடு ஊராட்சிப் பிரதிநிதிகள் கூட்டமைப்பு (த. நா. ஊ. பி. கூ. - TNUPK) 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கிராம ஊராட்சிகளை வலுப்படுத்தவும், அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தமிழ்நாடு அளவில் நேர்மையாகப் பணியாற்றும் ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் மூலம் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது இந்தக் கூட்டமைப்பு கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண தன்னாட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

             

இணையவழி சான்றிதழ் படிப்பு

பயிற்சியில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு உள்ளாட்சிகள் என்றழைக்கப்படும் உள் சுயாட்சி அரசுகளைப் பற்றிய ஒரு பரந்துபட்ட பார்வையை வழங்குவதே இப்பயிற்சியின் நோக்கம். உள்ளாட்சி அரசுகள், கிராமசபை, அதில் எளிய மக்களுக்கான வாய்ப்புகள், அதிகாரங்கள் பங்கேற்பு ஜனநாயகத்தின் அவசியம் மற்றும் தற்போதைய சூழல் போன்றவற்றை விவாதித்து பயிற்சியில் கலந்துகொண்டோரை உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்க ஊக்குவிப்பதாக இப்பயிற்சி அமையும் என்று நம்புகிறோம்.

நாங்கள் சென்னை சமூகப் பணி கல்லூரியுடன் இணைந்து இந்தப் பாடத்திட்டத்தை வழங்குகிறோம். இந்தப் பாடத்திட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்றுள்ளனர், மேலும் 150க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

ஆய்வுகள்

அரசு நிர்வாகத்தில் ஒரு சிக்கலை சரிசெய்வதற்கு முன், அதை முழுமையாக ஆராய்ந்து அறிவது அவசியம். அந்த வகையில், உள்ளூர் அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கிராம சபைகள் மற்றும் 100 நாள் வேலை குறித்து நாங்கள் ஒரு ஆய்வை நடத்தி, அதைப் பகுப்பாய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளோம்.

Advocacy

ஒரு அமைப்பாக நாங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொள்கையில் செல்வாக்கு செலுத்தவும், நீடித்த மாற்றத்தை உருவாக்க சமூகங்களை அதிகாரப்படுத்தவும் இயங்கி வருகிறோம். உள்ளூர் நிர்வாகம் மற்றும் அதிகாரப் பரவலை வலுப்படுத்த அரசாங்கத்திற்காகவும் அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம்.

அந்த வகையில், நீடித்த தாக்கத்திற்கான வலுவான, ஒன்றுபட்ட முயற்சிகளை உருவாக்க உள்ளாட்சி நிபுணர்கள், உள்ளூர் அரசாங்கங்கள், குறிப்பாக கிராம ஊராட்சிகள், ஒத்த எண்ணம் கொண்ட பிற அமைப்புகள்/நிறுவனங்கள் மற்றும் நிச்சயமாகப் பொது மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த முயற்சிகள் அரசு கொள்கை முடிவுகளிலும் அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றன.

2021 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலின் போது ஒத்த எண்ணம் கொண்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி, ஒரு கூட்டு அரசியல் ஆவணமாக, 2021 ஆம் ஆண்டுக்கான அதிகாரப் பரவல் தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டோம்.

 

MGNREGA பணிகளுக்கான தொழிலாளர் வரவு செலவு அறிக்கையைத் தயாரிக்க உதவுவதற்காக நாங்கள் சில கிராம ஊராட்சிகளில் வேலை செய்துள்ளோம்.

 

மேலும், நாங்கள் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளோம், முக்கியமான பிரச்சினைகள் குறித்து நேர்காணல்களை வழங்கியுள்ளோம், பல்வேறு பிரச்சினைகள் குறித்து அறிக்கைகள் மற்றும் பத்திரிகை செய்திகளை வெளியிட்டுள்ளோம், சில முக்கிய சிக்கல்களுக்கு நீதிமன்றத்திற்கு கூட சென்றுள்ளோம்.

 

நிகழ்வுகள் மற்றும் பிற

உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாம் பெண்கள், இளைஞர்கள், 100 நாள் வேலை செய்யும் மக்கள், மகளிர் குழுக்கள், கிராமம் சார்ந்த இயக்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் எனப் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து, பல்வேறு சிறு சிறு சந்திப்புகள், உரையாடல்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள், நேரடி மற்றும் இணையவழி நிகழ்வுகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறோம். பஞ்சாயத்து ராஜ் நாள் முதற்கொண்டு ஒவ்வொரு முக்கியமான நாட்களிலும் நேரடி அல்லது இணையவழி நிகழ்வுகளை நடத்தி கிராம சபை, நகரங்களுக்கான பகுதி சபை, உள்ளாட்சித் தேர்தல், ஊராட்சி பொது நிர்வாகம், ஊராட்சி நிதி நிர்வாகம், 100 நாள் வேலை, ஊராட்சிகளின் ஊழல், ஊராட்சிகளில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பின் முக்கியத்துவம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்.

கடந்த 2020 இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையாகப் போட்டியிட்டு வென்ற ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுடனான ஒரு உரையாடல் நிகழ்வை நடத்தியுள்ளோம். அதே போல் 2021 இல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சித் தலைவர்களுடன் ஒரு உரையாடல் நிகழ்வை நடத்தியுள்ளோம். மேலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு கனிமொழி அவர்கள் கலந்து கொண்ட, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெண் ஊராட்சித் தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டு பயிற்சி அளித்துள்ளோம்.

மேலும் ஊராட்சியில் உள்ள சாதாரண மக்கள், ஊராட்சி நிர்வாகம் தொடர்பான தங்கள் சந்தேகங்களுக்கு விடை காணும் விதமாக, உள்ளாட்சிகளுக்கான மக்கள் தகவல் மையம் என்ற அலைபேசி சேவையினை வழங்கி வருகிறோம். அதன் அழைப்பு எண் 9443662058.

தவிர வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வானகம், IGG, அறப்போர், மக்களின் குரல், தோழன், தாம்பரம் மக்கள் குழு, அரண் அறக்கட்டளை, வான்முகில் அறக்கட்டளை, வானூரின் SLI, சிட்டிலிங்கி ஊராட்சியின் SOFA, ஏகம் அறக்கட்டளை, விடியல் நிறுவனம், கி ஸ்டோன், சின்மய கிராம மேம்பாட்டு அமைப்பு, அகரம், தக்ஷின் நிறுவனம் மற்றும் பல கிராம மக்களின் இளைஞர் குழுக்கள் போன்ற பல்வேறு அமைப்புகளுடனும் முன்னோடி ஊராட்சித் தலைவர்களுடன் இணைந்து வேலை செய்து வருகிறோம். மேலும், காந்திகிராம் பல்கலைக்கழகம், காந்திகிராம் அறக்கட்டளை, சென்னை சமூகப் பணி கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி திருச்சி, JKKN கல்லூரி குமாரபாளையம் மற்றும் பல கல்லூரிகளுடன் இணைந்து சில பயிற்சிகள் அளித்துள்ளோம்.

அசின் பிரேம்ஜி பவுண்டேஷன் உடன் இணைந்து ஒரு மூன்று ஊராட்சிகளில் தன்னார்வலர் குழுக்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

தன்னாட்சியின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த, நம் அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் நமக்குத் தேவை. உங்களைப் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட எவருடனும் இணைந்து பணியாற்ற தன்னாட்சி தயாராக உள்ளது. தயங்காமல் எங்களுடன் கைகோர்த்து, நாம் ஒன்றாக அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் வாருங்கள்.

தன்னாட்சி அலுவலக எண்: +91 94457 00758
தன்னாட்சி தகவல் மையம்: +91 94436 62058
தமிழ்